court

img

இந்தியாவில் திருமணம் என்பது சடங்கு, சம்பிரதாயம், சமூக மதிப்பீடுகளை சார்ந்தது.... ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்க முடியாது...தில்லி நீதிமன்றத்தில் மோடி அரசு திட்டவட்டம்....

புதுதில்லி;
1955-ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்டப் பிரிவின் கீழ், ஒரே பாலினத்தவருக்கு இடையிலான திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என்று மத்திய பாஜக அரசு மீண்டும் தனது நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளது.

எல்.ஜி.பி.டி.க்யூ. சமூகத்தவர் எனப்படும் பெண் தன்பாலினச் சேர்க்கையாளர்கள் - (லெஸ்பியன்), ஆண் தன்பாலினச் சேர்க்கையாளர்கள் (கே),  இருபால் உறவாளர்கள்  (பைசெக்சுவல்), டிரான்ஸ்ஜெண்டர் (திருநங்கையர், திருநம்பியர்)  வினோதமான உறவாளர்கள்  (Lesbian, Gay, Bisexual, Transgender and Queer or Questioning) சார்பில் ஒன்றும், கடந்த எட்டு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் கவிதா அரோரா, அங்கிதா கன்னா ஆகிய ஒரே பாலின தம்பதிகள் சார்பில் மற்றொன்றுமாக தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

அந்த மனுக்களில், “இந்து திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமணச் சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமணங்களை அங்கீகரித்து பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.
எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தின் சார்பில் அபிஜித் ஐயர் மித்ரா, கீதா தடானி, மதுரையில் வசிக்கும் கோபிசங்கர், ஊர்வசி ஆகியோர் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு 2020 செப்டம்பர் மாதம் தில்லி உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “அரசியல் சட்டப் பிரிவு 377-இன் கீழ் ஒரேபாலின உறவைக் குற்றமாகக் கருதுவதை ரத்து செய்து, கடந்த 2018-ஆம் ஆண்டே உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி விட்டது. ஆனாலும், ஒரேபாலின திருமண பதிவுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது சமத்துவம் மற்றும் வாழ்க்கைக்கான உரிமையை மீறுவதாக உள்ளது” என்று மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

மறுபுறத்தில், ‘தன்பாலின உறவு குற்றமாகாது’ என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தாலும், அதற்கு மேல் திருமணம் உள்ளிட்டவை குறித்து வேறெதுவும் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டு, “இந்து திருமணச் சட்டத்தின் கீழ், தம்பதியினர் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும். தன்பாலின திருமணங்களில் ஆண், பெண் பாத்திரங்களை வகிப்பது யார்? குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் 7 ஆண்டுகள் வரை, பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அந்தச் சட்டத்தை எப்படி பொருத்துவது?” என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், ஒரே பாலினத்தவருக்கு இடையிலான திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பான விஷயத்தில், மத்திய அரசு தனது நிலையை விளக்கும் வகையில்  பிரமாணப்பத்திரத்தை ஒன்றைத் தற்போது தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துஉள்ளது.அதில், “ஒரே பாலினத்தவர்கள் ஒன்றாக வாழ்வதையும், அவர்களுக்குள்ளான பாலியல் உறவையும் இந்திய குடும்ப அமைப்புடன் ஒப்பிட முடியாது. ஒரு கணவன் (உயிரியல் ரீதியான ஆண்), மனைவி (உயிரியல் ரீதியான பெண்) மற்றும் குழந்தைகள் என்பதே இந்தியாவின் குடும்ப அமைப்பு” என்று தெரிவித்துஉள்ளது.“இந்தியாவில் திருமணம் என்பது ஒரு சடங்காக கருதப்படுகிறது. மேலும், பழைய பழக்க வழக்கங்கள், கலாச்சார நெறிமுறைகள், சடங்குகள் மற்றும் சமூகவிழுமியங்களை பொறுத்தது. ஒரேபாலின சேர்க்கையை சட்டவிரோதம் என அறிவித்த பிரிவு 377 நீக்கப்பட்டாலும், இதைக்காட்டி ஒரே பாலின திருமணத்தை பிரிவு 21-இன் கீழ் அடிப்படை உரிமையாக கோர முடியாது. ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பது, தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தை மீறும் செயலாக இருக்கும். அத்துடன் இதுபோன்ற திருமணங்களைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது என்பது நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டியதே அல்லாமல், ஒருபோதும் அது நீதித்துறையின் தீர்ப்புக்கு உட்பட்ட விஷயமாக இருக்க முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

;